54 கல்குவாரிகளில் ஒன்றே ஒன்றுதான் தங்கம்... நெல்லையை கபளீகரம் செய்யும் குவாரிகளுக்கு கடிவாளம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 1, 2025 முதல் கனிம சேமிப்பு கிடங்குகளிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல இணையம் வாயிலாக மாற்று நடைச்சீட்டு வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 54 கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து குண்டுக்கல், ஜல்லி உள்ளிட்ட கனிமங்கள் கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கான , நடைச்சீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
கடந்த காலத்தில் திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் போலி நடைச்சீட்டுகள் வழங்கி, அதிகளவில் கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில், மதுரை மண்டல இணை இயக்குநர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், 2022 ம் ஆண்டு மே மாதத்தில் அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் செயல்பட்டு வந்த கல்குவாரியில் பாறைகள் வெட்டி எடுக்கும்போது மண் சரிவு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அரசின் விதிகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக பாறைகள் வெட்டி எடுத்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
இதைததொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள 54 குவாரிகளையும் மூடி, விதிமீறல் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டது. இதில் 53 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டது. ஒரே ஒரு கல்குவாரியில் மட்டுமே விதிமீறல்கள் இல்லை. வீதிமீறல்களில் ஈடுபட்ட குவாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கனிமக் கடத்தல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, ஏற்கனவே, குவாரிகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழி Bulk Permit வழங்கும் நடைமுறை 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமலில் உள்ளது. மேலும், (E-Permit) வழங்கும் முறை பிப்ரவரி 2025 முதல் அமலில் இருக்கிறது.
தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்துச் செல்ல வழங்கப்படும் மாற்று நடைச்சீட்டுகளை இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குத்தகைதாரர்கள் மற்றும் சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மாற்று நடைச்சீட்டினை பெற்றுக் கொள்ள நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.