திருநெல்வேலியில் 17 வயது சிறுவன் மீது சீருடை அணியாத போலீசார் தாக்குதல்?தூத்துக்குடி எஸ்.பி திட்டவட்ட மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர், தற்போது நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார் . இவருக்கு 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உண்டு. அந்த சிறுவன் நேற்று நெல்லை சந்திப்பிலுள்ள அண்ணா சிலை அருகே, மாலை 3 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுவனை வழிமறித்துள்ளனர். சிறுவனிடத்தில் 'உனது, தந்தை எங்கே?' என கேட்டுள்ளனர். அப்போது, 'சிறுவன் நீங்கள் யார் ? 'என்று பதிலுக்கு கேட்டுள்ளான்.

'நாங்கள் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் . சிவில் பிரச்னை காரணமாக உனது தந்தையை கைது செய்வதற்காக வந்துள்ளோம்' போலீசார் கூறியுள்ளனர். இதனால், 'தந்தை எங்கே இருக்கிறார் என்று தெரியாது 'என பதில் அளித்துள்ளான். உடனே, 'அப்படியானால் நீ எங்களுடன் வா 'என்று கூறி சிறுவனை இழுத்து செல்ல முயன்றுள்ளனர்.பயந்து போன சிறுவன் , ஓட முயற்சித்துள்ளான். இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து போலீசார் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. ஓடிய சிறுவன் மீது லத்தியை தூக்கி எறிந்தாகவும் சொல்லப்படுகிறது. இதில், சிறுவனின் கழுத்து பகுதியில் காயம் கூறப்படுகிறது.

எனினும், போலீசாரிடத்தில் இருந்து தப்பித்த சிறுவன், வீட்டுக்கு சென்று விட்டான். அங்கு, உறவினர்களிடத்தில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளான். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் சிறுவனை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன், ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் சிறுவன் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரில் இரண்டு காவலர்கள் சீருடை அணியாமல் வந்து தன்னை தாக்கியதாக சிறுவன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவலாளி அஜித்குமார் விசாரணை என்ற பெயரில் தனிப்படை போலீசார் அழைத்து சென்று மிகக் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார் . அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருநெல்வேலியில் 17 வயது சிறுவனை தனிப்படை காவலர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இந்த சம்பவத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'சிறுவனின் தந்தை தலைமறைவான குற்றவாளி. ஸ்ரீவைகுண்டம் தனிப்படையினர் யாரும் சிறுவனின் தந்தையை தேடி நேற்று திருநெல்வேலிக்குச் செல்லவில்லை .நேற்றைய தினம் பிற்பகலே தனிப்படை போலீசார் காவல் நிலையத்திற்குத் திரும்பிவிட்டனர். சிறுவனுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காகவே சிறுவன் இந்த வேலையை செய்துள்ளான் ' என்று விளக்கம் அளித்துள்ளார்.

More News >>