இருதய பாதிப்பைக் கண்டறிய புதிய வழிமுறை: இந்திய வம்சாவளி மாணவி கண்டுபிடிப்பு!
பரம்பரையாகத் தொடரும் இருதய நோய் பாதிப்புகளைக் கண்டறிய ஸ்டெம் செல் வழிமுறையை தனது ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி ராகவி.
சென்னையைச் சேர்ந்தவர் மாணவி ராகவி. இவரது பெற்றோரின் பணி சூழலால் சிங்கப்பூரில் இவரது குடும்பம் தற்போது குடியேறியுள்ளது. சிங்கப்பூரின் தேசிய அளவிலான திறமையாளர்களுக்கான போட்டியில் பரம்பரை பரம்பரையாகத் தொடரும் இருதய பாதிப்புகளை வழக்கமான சிகிச்சை முறைகள் இல்லாமல் ஸ்டெம் செல் மூலம் எளிதாகக் கண்டறியும் வழிமுறையை தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார் ராகவி.
இவரது ஆராய்ச்சிக்கு சிங்கப்பூரின் தேசிய விருது கிடைத்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இப்போட்டியில் சிறந்த ஆராய்ச்சியாளராக ராகவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தனது ஆராய்ச்சி குறித்து மாணவி கூறுகையில், “இருதய பாதிப்புகளைக் கண்டறிய ‘கார்டியாக் பயோப்சிஸ்’ என்ற முறை நடைமுறையில் உள்ளது. இது கடினமான முறை என்றாலும், ஸ்டெம் செல் கண்டறியும் முறை மிகவும் எளிதானது. இதுதான் எனது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது” என்கிறார் இப்பள்ளி மாணவி.
இவருக்கு பரிசாக சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றில் கல்லூரிப் படிப்பை படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.