நெல்லையில் போலீசார் தாக்கியதாக சொல்லப்படும் சிறுவனை சந்தித்து ஆறுதல் கூறிய நாகர்கோவில் எம்.எல்.ஏ

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆதிச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவர், தற்போது நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் குடும்பத்தோடு குடியிருந்து வருகிறார் . இவருக்கு 12ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உண்டு. அந்த சிறுவன் நேற்று நெல்லை சந்திப்பிலுள்ள அண்ணா சிலை அருகே, மாலை 3 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சிறுவனை வழிமறித்துள்ளனர். சிறுவனிடத்தில் 'உனது, தந்தை எங்கே?' என கேட்டுள்ளனர். அப்போது, 'சிறுவன் நீங்கள் யார் ? 'என்று பதிலுக்கு கேட்டுள்ளான்.

'நாங்கள் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் . சிவில் பிரச்னை காரணமாக உனது தந்தையை கைது செய்வதற்காக வந்துள்ளோம்' போலீசார் கூறியுள்ளனர். இதனால், 'தந்தை எங்கே இருக்கிறார் என்று தெரியாது 'என பதில் அளித்துள்ளான். உடனே, 'அப்படியானால் நீ எங்களுடன் வா 'என்று கூறி சிறுவனை இழுத்து செல்ல முயன்றுள்ளனர்.பயந்து போன சிறுவன் , ஓட முயற்சித்துள்ளான். இதையடுத்து, அந்த சிறுவனை பிடித்து போலீசார் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. ஓடிய சிறுவன் மீது லத்தியை தூக்கி எறிந்தாகவும் சொல்லப்படுகிறது. இதில், சிறுவனின் கழுத்து பகுதியில் காயம் கூறப்படுகிறது. தற்போது, சிறுவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான்.

இந்தநிலையில், காயமடைந்த மாணவனை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசுகையில், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை முதலமைச்சர் கவனமாக கையாளத் தவறிவிட்டார். சிறுவன் மீதான இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதற்கும்,மாணவன்மீது நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும். நெல்லையில் ஒரு பூங்காவில் காவலர் ஒருவருக்கே அரிவாள் வெட்டு விழுகிறது. அப்படியிருக்கையில், தமிழகம் எப்படி அமைதி பூங்கா என்று முதல்வர் கூறுகிறார் என்று தெரியவில்லை'

இ்வவாறு அவர் கூறினார்.

More News >>