நெல்லையப்பர் ஆனித் தேரோட்டம்: பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம் -ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் ஆனித் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜூலை 3ம் தேதி மாலை நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தேரோட்டத்தை சிறப்பாக நடத்த அரசு சார்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒதுக்கப்பட்ட பணிகளை நல்ல முறையில் செய்து வருகின்றனர். பெரும்பாலான பணிகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. பக்தர்களின் வசதிக்காக 100 நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளன. தேர் ஓடும் நான்கு ரத வீதிகளிலும் 8 இடங்களில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது . தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் அனைவருக்கும் குடிதண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள் சிரமமின்றி தேரோட்டத்தைப் பார்வையிடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்காக 20 இடங்களில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் சமயத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். தேரோட்டம் தொடங்கி, நிலைக்கு வர குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது ஆகும்.
நான்கு ரத வீதிகளிலும் சிறப்பு மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத விதமாக மின்சார விநியோகம் தடைபட்டால் உடனடியாக வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக 50 ஆபத்துக்கால விளக்குகளும் (Emergency Lights) அமைக்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் மருத்துவ வசதிக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தேரோட்ட வீதிகளில் பொதுமக்களுக்குத் தேவைப்படும் முதலுதவிகளைச் செய்வார்கள். அவசர உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்கள் ஐந்து இடங்களில் நிறுத்தப்படும்.
பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை தேவைப்பட்டால் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உடனடியாகக் கொண்டு செல்லப்படுவார்கள். மக்களோடு மக்களாகக் காவலர்களும் சாதாரண உடையில் கலந்து இருப்பார்கள். 85 இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். தொடர்ந்து கூட்ட நெரிசல் மற்றும் செயல்பாடுகளை காவல்துறையினர் கண்காணித்து, எந்தவித அசம்பாவிதங்களும் நேரிடாதபடி, கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் பேட்டியின் போது, திருநெல்வேலி மாநகரக் காவல்துறை துணை ஆணையாளர் பிரசன்ன குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.