லட்சியத்தை அடைய தேவை விடாமுயற்சி - நெல்லை துணை ஆணையர் பிரசன்னகுமார் மாணவிகளுக்கு அறிவுரை
திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கும் ஒரு வார காலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் பிரசன்ன குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளிடத்தில் பேசினார். அவர் பேசியதாவது, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் சேர்த்து விட முயற்சியுடன் ஒரு செயலை செய்தால் நிச்சயமாக ஒரு நாள் வாழ்வில் வெற்றி பெறலாம். நான் மருத்துவதுறையில் இருந்து காவல்துறைக்கு வந்தேன். அதற்கு, என் மனைவியின் முழு ஒத்துழைப்பும் உற்சாகமும் ஆதரவும்தான் காரணம். இன்று நான் உங்கள் முன்னிலையில் ஒரு காவல்துறை அதிகாரியாக நிற்பதற்கு, என் மனைவியின் உதவியும் முக்கிய காரணமாக இருந்தது.
அதேபோல் , வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் செய்யும் போது, மிகவும் கவனமாகவும் எதிர்காலத்தில் நம் வாழ்வில் ஏற்படக்கூடிய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் . சமூக வலைதளங்களை மாணவிகள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களால் குற்ற செயல்கள் அதிகமாகும் இந்த காலகட்டத்தில் சமூக சிந்தனையோடும் , பொறுப்போடும் மாணவிகள் நடந்து கொள்ள வேண்டும் . தேவையில்லாத காரியங்களில் நமது நேரத்தை செலவழிப்பதை விட்டுவிட்டு , படிப்பிலும் எதிர்கால லட்சியத்துக்கு தேவையான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் கூடிய விடா முயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராணி அண்ணா கல்லூரியின் முதல்வர் தீபா மற்றும் தமிழ் துறை தலைவர் உமா, மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் ராம்குமார் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு படிக்கக்கூடிய சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.