நாங்குநேரி அருகே சோகம் தீயில் கருகி 100 தென்னை மரங்கள் சேதம்
நாங்குநேரி அருகே தீ விபத்தில் 100 தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்தவர் விவசாயி பாலகிருஷ்ணன் (60). இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு நாங்குநேரி அடுத்த விஜயநாராயணம் அருகேயுள்ள வட்டவிளையில் உள்ளது. இந்த தென்னந்தோப்பில் நேற்று திடீரென தென்னை மரங்கள் தீ பிடித்து எரியத் தொடங்கியன. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென பரவி தோப்பு முழுவதும் பரவியது. தகவலறிந்து விரைந்து வந்த நாங்குநேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் துரித நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சுமார் 100 தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா அல்லது மின்சார வயர்கள் உராய்வின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.