நெல்லை அரசு அதிகாரி மீது பி.சி.ஆர் வழக்கு ... போலீஸ் விசாரணையில் புதிய திருப்பம்

பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர்  பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளியை ஜாதி ரீதியாகத் திட்டி, சாதி சான்றிதழ் வழங்க மறுத்ததாக சொல்லப்பட்ட புகாரில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

நெல்லை, பாளையங்கோட்டை, கோரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (54). பட்டியலினத்தை  சேர்ந்த இவர் கடந்த மாதம் 22ம் தேதி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகள் ஜெமிலிக்கு சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன்.  பலமுறை முறையிட்டும் கிடைக்காத நிலையில் ஜூன் 17ம்தேதியன்று வருவாய் ஆய்வாளர் பழனிகுமார் என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்தார். பின்னர், என்னை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், சான்றிதழ் வழங்க முடியாது என்று மிரட்டினார். இது தொடர்பாக அமைச்சரிடம் சென்று புகார் கூறினேன். இதனால், ஆத்திரமடைந்த பழனிகுமார் என்னை அடிக்க வந்தார். இதனால் ,எனது சட்டை கிழிந்தது என்று தெரிவித்திருந்தார். 

புகாரின் அடிப்படையில், பழனிகுமார் மீது பாரதிய நியாய சன்ஹிதா, 2023 பிரிவு 131 மற்றும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) திருத்தச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பேக்டர் காசிபாண்டியன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லை என போலீசார் வழக்கை முடித்து வைத்துள்ளனர். போலீசார் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.  ஆனால், புகார்தாரர் அளித்த வாக்குமூலம் மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

More News >>