வாழ்க்கையை கொண்டாடணுமா.. ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் ராம், தனது புதிய படமான பறந்து போ குறித்து பேச்சு

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல இயக்குநர் ராம், தனது புதிய படமான 'பறந்து போ' குறித்து பேசியுள்ளார். நடிகர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், சிரிப்புக்கும் கொண்டாட்டத்திற்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்றும், வாழ்க்கை குறித்த ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவரான இயக்குநர் ராம், தனது தந்தையின் ஊர் அருகிலேயே இயக்குநர் மாரி ராஜனின் ஊரும் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். "மிர்ச்சி சிவாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட 'பறந்து போ' திரைப்படம் முழுவதுமே நகைச்சுவையோடு இருக்கும். படம் பார்க்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, வாழ்க்கையை கொண்டாடுவீர்கள். குற்றாலத்திற்கோ அல்லது அருகிலிருக்கும் காட்டுப் பகுதிக்குச் செல்ல விரும்புவீர்கள். 'பறந்து போ' திரைப்படத்தைப் பாருங்கள், வாழ்க்கையைக் கொண்டாடுங்கள் என்பதுதான் என்னுடைய மெசேஜ்" என்று ராம் கூறினார்.

அறிவுரை இல்லை, கொண்டாட்டம் மட்டுமே!'

அறிவுரை சொல்லும் அளவுக்குப் படத்தில் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட ராம், தற்கால பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிப் பேசினார். "தற்கால பெற்றோர்கள் மிகுந்த கடினமான வாழ்க்கை முறையை மேற்கொள்கிறார்கள். சித்தர்கள் குருவே சேர்ப்பது போல் பணத்தைச் சேர்த்து குழந்தைகளுக்காகச் செலவு செய்கிறார்கள். குழந்தைகளுக்காக அனைத்தையும் செலவழிப்பதால் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாததால் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள். இந்தப் படம் அது போன்ற உணர்வுகள் உங்களுக்கு வேண்டாம்; உங்களால் முடிந்த சிறப்பான பங்களிப்பை குழந்தைகளுக்குக் கொடுங்கள் என்பதை கூறுகிறது" என்றார்.

மேலும், "தங்களால் முடிந்த நல்லதை குழந்தைகளுக்குக் கொடுப்பவர்கள் தான் மிகச்சிறந்த பெற்றோர்கள். அது போல் குழந்தைகளை முதல் ரேங்க் எடுக்க வேண்டும், இரண்டாவது ரேங்க் எடுக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாதீர்கள். குழந்தைகள் தங்களுக்கு உள்ள திறமையுடன் சந்தோஷமாக, அவர்களால் என்ன முடியுமோ அதனைச் செயல்படுத்த சுதந்திரத்தைக் கொடுங்கள். குழந்தையும் பெற்றோரும் சேர்ந்து வாழ்க்கையை கொண்டாடலாம் என்பதுதான் இந்த படத்தின் மையக் கருத்து" என்று அவர் விளக்கினார்.

18 ஆண்டு கால மாற்றம்:

2007 இல் வெளியான 'கற்றது தமிழ்' ராம், 2025 இல் 'பறந்து போ' ராம், என்ன வித்தியாசத்தை உணருகிறீர்கள் என்று கேட்டதற்கு, "அதே இடத்தில் தான் இருக்கிறேன்" என்று பதிலளித்தார். 'பறந்து போ' திரைப்படம் இன்றைய நவீன உலகின் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் நிலையை எடுத்துக்காட்டுகிறது என்றும், இந்த 18 வருடங்களில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

விருதுகள் மக்களின் கைத்தட்டல்களிலேயே!

விருதுகளுக்காகத் தான் படங்கள் எடுப்பதில்லை என இயக்குநர் ராம் திட்டவட்டமாகக் கூறினார். "மக்கள் ஒரு படத்தினைக் கொண்டாடும்போது விருது தானாக வரும். மக்கள் கொண்டாடுவதற்காகவே இந்த படத்தினைத் தான் எடுத்ததாக" அவர் குறிப்பிட்டார். மிர்ச்சி சிவாவுடன் தான் இணைந்த திரைப்படம் மிகுந்த நகைச்சுவையோடு இருப்பதாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதாகவும் ராம் குறிப்பிட்டார்.

ராம் - மிர்ச்சி சிவா கூட்டணி: கடினமானவர் இனிமையானவர்!

மிகுந்த ஜாலியாகத் தமிழ் திரையுலகில் அறியப்படும் மிர்ச்சி சிவா, சீரியசான இயக்குநர் ராமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். "ராம் வெளியில் தான் மிகவும் கடினமான மனிதர், ஆனால் பழகும் போது மிகவும் இனிமையானவர்" என்று மிர்ச்சி சிவா குறிப்பிட்டார். ஒரு இயக்குநருக்கும் ஒரு நடிகருக்கும்மான சிறந்த புரிந்துணர்வு தங்களுக்கு இடையே இருந்ததாக இருவரும் தெரிவித்தனர். இந்தப் படத்தைப் பொறுத்தவரை தேசிய விருது, ஆஸ்கார் விருது என்பவை எல்லாம் படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் கொடுக்கும் கைத்தட்டல்களில் தான் அடங்கியுள்ளதாக மிர்ச்சி சிவா குறிப்பிட்டார். "வாழ்க்கை மிகவும் எளிதானது; அதனை அனுபவிக்க வேண்டும் என்பதே இப்படத்தின் கருத்து" என்றும் அவர் கூறினார்.

விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து...

நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, இயக்குநர் ராம், "அவர் எங்களுடைய சக கலைஞர். அரசியல் மற்றும் அவர் முதல்வர் ஆவது அவருடைய தனிப்பட்ட முடிவு. நல்லது நடந்தால் சரிதான்" என்று பதிலளித்தார்.

மிர்ச்சி சிவாவின் அரசியல் ஆசை (நகைச்சுவையுடன்)!

உங்களுக்கு அரசியல் ஆசை இருக்கிறதா என செய்தியாளர்கள் மிர்ச்சி சிவாவிடம் கேட்டபோது, தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன், "எனக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் தமிழக அரசியலில் ஆர்வம் இல்லை; அமெரிக்க அரசியலில் டிரம்ப் உடன் போட்டி போட விரும்புகிறேன்" என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

More News >>