அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம்.. பேருந்து நிலையத்திற்குள் செல்லாது.. நடத்துனருக்கு ரூ. 12,000 அபராதம்

அரசு பேருந்து, அதிக கட்டணம் வசூலித்தது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்திற்குள் செல்லாததற்காக திருநெல்வேலி நுகர்வோர் ஆணையம் பேருந்து நடத்துனருக்கு அபராதம் விதித்துள்ளது..

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா நாங்குநேரி சன்னதி தெருவில் வசிக்கும் கண்ணன் , பார்வதி நாதன் ஆகிய இருவரும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்திற்கு பயணம் செய்வதற்கு அரசு பேருந்து டிக்கெட் கட்டணம் ரூபாய் 50/- செலுத்தி இரண்டு டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர்.

அரசு பேருந்து நடத்துனர், பேருந்து நாங்குநேரி பேருந்து நிலையத்திற்கு போகாது என்றும் பைபாஸ் வழியாக நாகர்கோவிலுக்கு நேரடியாக செல்லும் என்பதால் பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார்.

அரசு பேருந்து நாங்குநேரி பேருந்து நிலையம் வரை செல்வதற்கு ரூட் பெர்மிட் இருந்தும் பேருந்து நாங்குநேரி ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் வழியாக நாகர்கோவில் செல்வது சேவை குறைபாடு என இருவரும் நடத்துனரிடம் கேட்டுள்ளனர்.

நடத்துனர் மறுத்ததால் மேலாண்மை இயக்குனர் அலுவலகத்திற்கு கைப்பேசி மூலம் பேசி உள்ளனர்.

மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் பேசிய பணியாளர் நடத்துனரை நாங்குநேரி ஊருக்குள் சென்று பேருந்து நிலையத்தில் இருவரையும் இறக்கி விட உத்தரவிட்டுள்ளார் . தொடர்ந்து, இருவரையும் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

மேலும் திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரி செல்வதற்கு அரசு விதிமுறைகளின் படி கட்டணமாக ரூபாய் 23 வசூல் செய்திருக்க வேண்டும்

ஒரு நபரிடம் ரூபாய் 25 விகிதம் இருவரிடமும் சேர்ந்து கூடுதலாக 4 ரூபாய் வசூல் செய்திருப்பது முறையற்ற வாணிபம் என்பதாலும் நாங்குநேரி ஊருக்குள் உள்ள பேருந்து நிலையத்தில் இறக்கி விட மறுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான இருவரும் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்னர்.

வழக்கு விசாரணை செய்த ஆணைய தலைவர் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் இருவருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 7000 வழக்குச் செலவு ரூபாய் 5000 சேர்த்து மொத்தம் ரூ,12,000 ஒரு மாத காலத்துக்குள் வழங்க உத்தரவு பிறப்பித்தனர்.

More News >>