ஒரே மாதத்தில் ரூ.55 லட்சத்துக்கு பினாயில் பில்... புது கமிஷனரை வைத்து போடும் திட்டம் பலிக்குமா?

திருநெல்வேலி மாநகராட்சியில், தச்சநல்லூர், டவுன், மேலப்பாளையம் உள்ளிட்ட நான்கு மண்டலங்கள் உள்ளன. அப்போதைய, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை விடுப்பில் சென்றிருந்தார். மார்ச் மாதம் மாநகராட்சிக்கு, 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியதாக பில் வந்துள்ளது. ஏப்ரலில் மீண்டும் பணிக்கு வந்த பொறுப்பேற்ற நகர் நல அலுவலர் சரோஜா, சந்தேகத்திற்குரிய பினாயில் உள்ளிட்ட பில்களுக்கு அனுமதி மறுத்துள்ளார்.குறிப்பாக, மாநகராட்சியில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய்க்கு தான் பினாயில், சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். ஒரே மாதத்தில் 55.35 லட்சம் ரூபாய்க்கு பினாயில் மட்டும் வாங்கிய பில் குறித்து சரோஜா , அப்போதைய கமிஷனர் தாக்கரேவிடம் புகார் தெரிவித்தார். இதனால், சர்ச்சை வெடித்தது.

திருநெல்வேலி மாநகராட்சியில்வழக்கமாக ரூ.10 லட்சத்திற்கு வாங்கும் பொருட்களுக்கு ரூ .50 லட்சம் என கணக்கு காட்டி 40 லட்சம் கமிஷன் அடிப்பதும் அதில், சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ 5 லட்சம் கமிஷன் தருவதும் வழக்கமாம். இப்போது, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக இருந்து மாறுதலாகி சென்ற கமிஷனர் சுகபுத்ராவும் கடைசி ஒரே நாளில் 4 கோடியே 75 லட்சம் மதிப்பிலான பல்வேறு பில்களுக்கு அமர்ந்து கையெழுத்திட்டார். ஆனால் , பினாயில் பில் வந்த போது வேண்டாம் ப்ரோ...என்று தவிர்த்து விட்டார்.

எனவேதான் இந்த மேட்டரை புது கமிஷனரிடம் பேசி வரும் மாமன்ற கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்த விஷயத்தை பிரபல பத்திரிகை ஒன்று செய்தியாக நேற்று வெளியிட்டு விட கமிஷனர் மோனிகா ரானா அலெர்ட் ஆகிவிட்டார்.வழக்கமாக மாநராட்சி விஷயங்களை சொல்லும் மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் என்ன சார் ....வரும் மாமன்ற கூட்டத்தில் பினாயில் தீர்மானம் பாஸ் ஆகுமா? என்று கேட்ட போது, அவர், 'முடிச்சு விட்டுட்டீங்க போங்க ' என்று ஆதங்கப்பட்டார்.

More News >>