நாளை வேலைநிறுத்தம்: திருநெல்வேலியில் போக்குவரத்து முடங்காது என மாவட்ட ஆட்சியர் சுகுமார், எஸ் பி சிலம்பரசன் உறுதி
அகில இந்திய அளவில் நாளை நடைபெறும் தொழிற்சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் வங்கி, காப்பீடு, அஞ்சல் சேவைகள், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கமும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறது.
அதிமுக-வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது. தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நாளை பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டால், தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்த போராட்டத்தையொட்டி தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் சுகுமார் பேசுகையில், பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வருபவர்களை தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
திருநெல்வேலி மண்டல போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். பொதுப் போக்குவரத்தை முடக்கும் வகையில் செயல்படும் தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கூறுகையில் , "டிப்போக்கள் பாதுகாப்புடன் இருக்கும். காவல்துறை அதிகாரிகளின் வழக்கமான ரோந்து மற்றும் பதற்றமான பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.