வண்ணாரப்பேட்டை: இரவோடு இரவாக மாயமான சாலை மாநகராட்சியின் அஜாக்கிரதையால் பெரும் அவதி!
திருநெல்வேலி மாநகரின் மிக முக்கியமான பகுதியான வண்ணாரப்பேட்டையில், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக இரவோடு இரவாக சாலைகள் தோண்டப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி இரவோடு இரவாகச் சாலைகளைத் தோண்டியதால், வண்ணாரப்பேட்டை பகுதி குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். திடீரென ஏற்பட்ட பள்ளங்களால், ஏராளமானோர் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்து எழுந்து செல்ல வேண்டியதுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து போக்குவரத்து காவலர்கள், மாநகராட்சி ஒப்பந்ததாரரை அழைத்து உடனடியாக பள்ளங்களை சமன் செய்யும்படி சொன்னார். ஆனால், பெயரளவுக்கு வெறும் மண்ணை மட்டும் கொட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். இதனால், காற்று வீசினால் புழுதி ஏற்பட்டு விடுகிறது . இதனால், எழும் தூசியால் மக்களின் கண்களுக்கும் பாதிப்ப ஏற்படுத்துகின்றன. சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த புழுதியால் மேலும் அவதிப்படுகின்றனர்.வண்ணாரப்பேட்டையில் பேருந்து நிலையத்தில், காத்திருக்கும் பயணிகள் புழுதிக்கு மத்தியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக , தலையிட்டு, தோண்டப்பட்ட சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும், பயணிகளின் நலனைக் கருதி பேருந்து நிலையத்தில் போதுமான இருக்கைகளை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டிய மாநகராட்சி, மெத்தனம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணாவிடம் கேட்டபோது, 'விஷயம் தனது கவனத்திற்கு வந்ததாகவும், சாலைகளை சீரமைக்க நிதி ஒரு நாள் வருகிறது, மற்றொரு நாள் குடிதண்ணீர் குழாய் பதிக்கும் நிதி ஒதுக்குகிறார்கள். எனவே, அனைத்து துறை செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செயல்பட முடியவில்லை . இதனால், ஒரு சில இடங்களில் சாலை அமைத்த பிறகு மீண்டும் குடிநீர் குழாய்களை பதிக்கிறார்கள் 'என்றார்.