நாங்குநேரி உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளுக்கு 276 கோடி நிலுவை... தமிழக அரசுப் பேருந்துகளுக்குத் தடை !
தென் மாவட்டங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளில், ஜூலை 10 ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு அரசுப் போக்குவரத்து கழகங்கள் செலுத்த வேண்டிய 276 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைச் செலுத்தவில்லை. இதையடுத்து, நான்கு சுங்கச்சாவடி நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன . வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சுங்கசாவடிகளை கடக்க அரசு பேருந்துகளுக்கு தடை விதித்து உத்தவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவு தென் மாவட்டப் பொதுமக்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. திருநெல்வேலியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், "நாளை முதல் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் நாங்குநேரி சுங்கச்சாவடியைக் கடக்க முடியாமல் போனால், திருநெல்வேலி மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.தமிழக அரசும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பிரச்சனையை சரி செய்ய வேண்டும். போக்குவரத்து கழகங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், இது போன்ற தடை பொதுமக்களை மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கும். மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படும்" என்றார்.
திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிராஜ் கூறுகையில், உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படும் . முதல்வர் மு க ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில், தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொண்டார்
தடை காரணமாக தென் மாவட்டங்களில் அரசுப் பேருந்துகளின் சேவை கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.