நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூன் 18ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நெல்லை நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து பேஸ்புக்கில் பதவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.வி.சேகரின் இந்த செயலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் பிறகு, அந்த பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர் அதற்கான மன்னிப்பையும் கேட்டார்.
ஆனால், எஸ்.வி.சேகருக்கு எதிராக புகார்கள் குவிந்ததை அடுத்து சென்னை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதனால், எஸ்.வி.சேகர் கைது செய்யப்படுவார் என்ற சூழ்நிலை உருவாகியது. ஆனால், தற்போது எஸ்.வி.சேகர் இருக்கும் இடம் தெரியாமல் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லையை சேர்ந்த பத்திரிகையாளர் கோபாலசாமி என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராமதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், வரும் ஜூன் மாதம் 18ம் தேதி எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com