நெல்லையில் கடந்த 6 மாதத்தில் 23 கொலைகள்... போலீஸ் என்னதான் செய்கிறது?

நெல்லை மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டும், முன்விரோதம், சொத்துத் தகராறு, பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற காரணங்களுக்காக 23 உயிர்கள் பறிபோயுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி கூடங்குளத்தில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதலில் சேகர் (49) என்பவர் முன்விரோதம் காரணமாக உயிரிழந்தார். பணகுடியில் நிகழ்ந்த மற்றொரு துயரச் சம்பவத்தில், சந்தனகுமார் (35) என்ற தொழிலாளி 28 ஆயிரம் ரூபாய் கடன் தகராறில் கொலை செய்யப்பட்டார். பொன்னாக்குடியில் நடந்த கொலைச் சம்பவம் ரத்த உறவுகளுக்குள்ளேயே மனித நேயம் மரத்துப்போனதை வெளிக்காட்டியது. அருணாச்சலம் (47) என்ற நபரை அவரது அண்ணன் மகனே சொத்துத் தகராறில் அதே மாதம் கொன்றார்.திசையன்விளை அருகே இரண்டரை வயது குழந்தை தர்ஷினி தாயின் அலட்சியத்தால் மது கொடுத்து கொலை செய்யப்பட்டாள்.

நெல்லை டவுனில் ஓய்வு பெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் மார்ச் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டார். கடந்த மாதத்தில் மேலப்பாளையத்தில் இருவேறு கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஜெயலட்சுமி என்பவர் தனது தந்தையால் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டார். கூலித் தொழிலாளி மாரியப்பன் தனது மகனால் ஜூன் மாதம் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். கடந்த 2 நாட்களில் வள்ளியூரிலும், வீரவநல்லூரிலும் தலா ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. வள்ளியூரில் ஓய்வுபெற்ற இன்ஜினியரின் மனைவி ருக்மணி அடித்துக் கொல்லப்பட்டார். வீரவநல்லூரில் 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த தொடர் கொலைச் சம்பவங்கள் நெல்லை மாவட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளன. ஜனவரி முதல் ஜூலை வரை மொத்தமாக 22 கொலை வழக்குகளில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியகிறது. மது மற்றும் போதை பழக்கங்கள் கொலைகளுக்கு முக்கிய காரணமாக உள்ளன. நெல்லையை மீண்டும் அமைதிப் பூங்காவாக மாற்ற முடியுமா?

More News >>