திருநெல்வேலி : மஞ்சள்காமாலை பாதித்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்த தாய்... நுகர்வோர் நீதிமன்றம் செய்த காரியம்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் மேல தெருவில் வசித்து வருபவர் செய்யது அலி பாத்திமா. இவர், கடந்த மே மாதத்தில் பாளையங்கோட்டையிலுள்ள கிருஷ்ணா மருத்துவ மனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 8 மாதத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால், Neonatal intensive care unit பிரிவில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுள்ளது. அப்போது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒவ்வொரு முறையும் தாய்ப்பாலை பெற்று செவிலியர்கள் குழந்தைக்கு கொடுத்து வந்துள்ளனர்.
மே மாதம் 16ம் தேதி அதிகாலை 4 மணிக்கு செய்யது அலி தாய்ப்பால் கொண்டு சென்றுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் காலிங் பெல்லை பலமுறை அடித்தும் செவிலியர்கள் கதவை திறக்கவில்லை . இதனால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து, தாய்ப்பால் வீணடிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர், மருத்துவமனையில் இருந்து 20ம் தேதி டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளார்.
எனினும், குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் குறையாததால் லட்சுமி மாதவன் தனியார் மருத்துவமனையில் மே 20ம் தேதி உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். ஐந்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான செய்யது அலி பாத்திமா வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைந்திருக்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கினை விசாரித்த ஆணைய தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முகப்பிரியா ஆகியோர் மருத்துவமனை நிர்வாகம் குழந்தைக்கு உரிய நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க உதவியும் செய்யாதது சேவை குறைபாடு என்று கருத்து தெரிவித்தனர். இதனால், செய்யது அலி பாத்திமாக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 50 ஆயிரம் வழக்குச் செலவு ரூ.10 ஆயிரம் மொத்தம் 60 ஆயிரத்தை 45 தினங்களுக்குள் கிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டது. தவறினால் ஒன்பது சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.