ஒன்னு இங்கே... இன்னொன்று எங்கே ? அதுதான் இது... நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் அவலம்
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். சிலருக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், மருத்துவமனையின் (32 C) அறையில் உள்ள இரண்டு ஸ்கேன் எடுக்கும் இயந்திரங்களில், ஒரு இயந்திரம் மட்டுமே தற்போது இயங்குகிறது. இங்கு, மட்டுமே முதுநிலை மருத்துவரும், பயிற்சி செவிலியர்களும் பணியாற்றி வந்தனர். இயங்காத மற்றொரு ஸ்கேன் அறையில் மருத்துவரும் செவிலியரும் இருப்பதில்லை.
இரண்டு ஸ்கேன்கள் இருக்கிறதே இன்னொன்றை எங்கே என்று கேட்டால், அதுதான் இது என்று பதில் வருகிறது
இதனால் நூற்றுக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் உரிய நேரத்தில் ஸ்கேன் எடுக்க முடியாமல் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள் ஸ்கேன் ரிப்போர்ட்டை மருத்துவர்கள் பார்த்த பின்னரே,மருந்து வாங்கி செல்ல முடியும். மதியம் 12 மணிக்கு மேல் வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சை முடிவடைந்து விடும். இதனால், ஸ்கேன் எடுத்துக்கொள்ள இயலாமல் பெரும்பாலான நோயாளிகள் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
மருத்துவமனைகளில் பணி நேரத்தில் வார்டுகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. எனினும், சில ஊழியர்களின் பொறுப்பற்ற செயல்களால் நோயாளிகள் தினமும் சிரமப்படுகின்றனர். இரண்டாவது ஸ்கேன் இயந்திரத்தையும் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் மருத்துவர்களையும் செவிலியர்களையும் பணியில் அமர்த்தி கண்காணிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.