வடக்கன்குளத்தில் கிணற்றில் மூழ்கி மாணவர் பலி... பெற்றோரிடத்தில் பேரம் பேசப்பட்டதா? - எஸ்.பி விளக்கம்
வடக்கன்குளம் சி.எம்.எஸ் பள்ளி விடுதியில் மாணவன்பலியான விவகாரத்தில் பெற்றோரிடத்தில் பள்ளி நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் பேரம் பேசப்பட்டதாக வெளியான தகவலுக்கு நெல்லை எஸ்.பி மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் பணகுடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வடக்கன்குளத்தில் உள்ள சி.எம்.எஸ். பள்ளி விடுதியில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம், மாறாந்தை, அம்பலவாணர் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சேர்மதுரை தங்கியிருந்து படித்து வந்துள்ளார். கடந்த 5ம் தேதி மாலை சிறுவன் விடுதியில் வளாகத்திலுள்ள கிணற்றின் அருகே காய வைத்த துணிகளை எடுக்கும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்ததாக தெரிகிறது.
தகவல் அறிந்ததும் பணகுடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் சடலத்தை மீட்டனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.
சிறுவனின் தந்தை மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் பணகுடி காவல் நிலையத்தில் , விடுதியின் காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. வள்ளியூர் துணைக்காவல் கண்காணிப்பாளர், பணகுடி காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் சிறுவனின் இறப்பு குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் இறந்த விடுதியில் தங்கியுள்ள 104 மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் உடலை கூறாய்வு செய்யும் போது, பெற்றோரிடம் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால், சாட்சிகள் முன்னிலையில் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. உடற்கூறாய்வில் சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்தை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேரடியாக சென்று பார்வையிட்டார். பின்னர், அவர் கூறுகையில், இறந்த சிறுவனின் பெற்றோரிடத்தில் காவல்துறையினரோ அல்லது விடுதி நிர்வாகத்திடமோ எந்த பேரமும் பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை திசை திருப்பும் விதமாக உண்மைக்கு புறமான அவதூறு தகவல்களை பரப்புவோர் மீதுசட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளார்.