பாளையங்கோட்டையில் குடி போதையால், குடும்பமே சிதைந்து போன சோகம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கக்கன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 70). இவரது மகன்கள் இசக்கிமுத்து (44), மகாராஜா (38). இவர்கள் இருவரும் கட்டட தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர். இதில் இசக்கிமுத்து திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகாராஜாவுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளது. மனைவி அவரைப் பிரிந்து சென்று விட்டார்.

இதனால், பெண் குழந்தையை இசக்கிமுத்து கவனித்து வந்தார். மகாராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அவ்வப்போது மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் மது போதையில் வீட்டுக்கு வந்த மகாராஜா தந்தை மற்றும் சகோதரருடன் தகராறு செய்துள்ளார். இதனால் , தள்ளுமுள்ளு ஏற்படவே வீட்டில் இருந்த தேங்காய் நார் உரிக்கும் இரும்பு கம்பியால் மகாராஜாவை இருவரும் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மகாராஜா நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை இறந்து போனார். இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாவையும், இசக்கிமுத்துவையும் கைது செய்தனர்.

குடிபோதையால்,மகராஜன் கொல்லப்பட, இப்போது அவரின் தந்தையும் சகோதரரும் சிறை செல்ல நேரிட்டுள்ளது.

சமீபத்தில் மேலப்பாளையத்தில் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற கோபத்தில் பெற்ற மகள் ஜெயலட்சுமியை, வேல் என்ற முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்தார். படிக்கவில்லை என்று திட்டியதால், கருங்குளத்தில் தந்தையை மகன் கொலை செய்த சம்பவமும் நடந்தது. தற்போது, தந்தையும் மகனும் சேர்ந்து இளையமகனை கொலை செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் குடும்ப உறவுகளுக்குள் சகிப்புத்தன்மை குறைந்து வருவதையே காட்டுவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

More News >>