பெண் கொலை : திருநெல்வேலியில்200 கி.மீ சுற்றளவில் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு.. குற்றவாளி அதிரடி கைது!
திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடந்த வழக்கில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை 200 கிலோமீட்டர் தூரம் வரையிலான சிசிடிவி காட்சிகளை நுணுக்கமாக ஆராய்ந்து கொலையாளியை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 30 அன்று பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் சடலம் கண்டறியப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், பழவூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் எந்தவித சிறு தடயங்களும் இல்லை/ எனினும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதையடுத்து, சம்பவ இடத்திலும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள காற்றாலைகளிலும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.சுமார் 200 கிலோமீட்டர் தூரம் வரையிலான சிசிடிவி தரவுகள் சேகரிக்கப்பட்டு, நுணுக்கமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கிடைத்த முக்கிய தகவல்களைப் பயன்படுத்தி, காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சிசிடிவி தகவல்களின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடியைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற லிபி (வயது 53) என்பவர் பெண்ணின் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றவாளியான அமல்ராஜ், இறந்த பெண்ணை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 100 கி.மீ தூரம் பயணித்து பழவூர் அருகே வந்தபோது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில், அமல்ராஜ் தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்து தெரிய வந்தது.
மரணமடைந்த பெண்ணின் பெயர் கிரேசி என்பதும் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து, அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எந்தவித துப்புமே இல்லாத ஒரு வழக்கை, சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் திறமையாக விசாரித்து, கொலையாளியைக் கைது செய்து, இறந்தவரின் அடையாளத்தையும் கண்டறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் இந்த அசாத்திய துப்பறியும் பணி பாராட்டத்தக்கது.
இந்த விசாரணையை சிறப்பாக செய்த வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உட்கோட்ட காவல் அதிகாரிகளை காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.