பாஜகவின் வாக்காளர் பட்டியல் தில்லுமுல்லுவை முறியடிப்போம்: திருநெல்வேலியில் கனிமொழி எம்.பி. பேச்சு
புதிதாக அரசியல் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் மக்கள் மீது அக்கறை கொண்டவர் போல பேசுவது வேடிக்கையாக இருப்பதாக கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "இன்று டெல்லியில் இருப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக, பாஜகவின் அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்கும் தலைவர்களைக் கொண்ட இயக்கமாக திமுக தலைநிமிர்ந்து நிற்கிறது. இந்த நாடே நம்மைப் பார்த்து பிரமிக்கும் போர் குணத்தோடு நிற்கிறோம் என்றால், அதற்கு நாம் தாண்டி வந்த எண்ணற்ற போராட்டங்களும், பிரச்சனைகளும், சிறைச்சாலைகளும் தான் காரணம்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, "ஓர் அணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களை தங்கள் அணியில் இணைத்துக் கொள்ளும் தைரியமிக்க இயக்கம்.
பொதுவாக தெருமுனைக் கூட்டங்கள், கழக உடன்பிறப்புகள் சந்திப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை வீடு வீடாகச் சந்தித்து வாக்கு கேட்போம். ஆனால், 'ஓர் அணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பின் மூலம், நாம் செய்த திட்டங்களை மக்களுக்கு நினைவுபடுத்தும் வாய்ப்பை முதலமைச்சர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
பாஜக தான் போட்டியிடும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் குழப்பங்களை ஏற்படுத்தி பல இடங்களில் வெற்றி பெறுகிறது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு தேர்தல்களில் புதிய வாக்காளர்களை இணைத்தும், பலரை வெளியேற்றியும் பாஜக பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. நியாயமாக, நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். நமக்கு வாக்களிக்கும் யாரையும் பட்டியலில் இருந்து நீக்குவதையோ, இல்லாதவர்களைச் சேர்ப்பதையோ நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் ஒரு பத்து இடத்தில் கூட பாஜக வெற்றி பெற்ற விட கூடாது.
நடிகர் விஜய் 24 'லாக்கப் டெத்' மரணங்களுக்கும் நிவாரணம் தர வேண்டும் என்று கேட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஒரு திரைப்படம் என்பது பல செய்திகளைச் சொல்லக்கூடியது. ஆனால் சில நடிகர்கள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களில் 'லாக்கப் டெத்' நியாயம் என்பதை போல காட்டுகிறார்கள். அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் மக்களுக்கு அக்கறை உள்ளது போலப் பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது," என்று விமர்சித்தார்.யார் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த கூட்டணியில் அதிமுக இருக்கிறது. அனைத்து சவால்களையும் தாண்டி ஒரு சிறப்பான ஆட்சியைத் தர வேண்டும் என்றால், அரசை எப்படி நடத்துவது என்று புரிந்த முதலமைச்சரால் மட்டுமே அது முடியும்.
திமுக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும்போது, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ள அனைத்துத் துறை முகாம்கள் வழியாக கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டும் . பட்டா வாங்கித் தருவதாக இருந்தாலும், சான்றிதழ்கள் பெறுவதாக இருந்தாலும், மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்கு உதவுவதாக இருந்தாலும், அரசின் திட்டங்களை மக்கள் பெற பாலமாகச் செயல்பட வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.