வள்ளியூரில் தங்க நகைகளுக்காக முதிய பெண் கொலை... பெண் வேடமிட்டு கொலை செய்தவர் கைது
வள்ளியூரில் தனியாக வசித்து வந்த பெண் கொலை செய்யப்பட்டு, 10 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் இ.பி. காலனியைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பரிடன் மனைவி ருக்குமணி (66). இந்த தம்பதிக்கு செந்தில்முருகன், பாலச்சந்தர் என இரு மகன்களும் சண்முகசுந்தரி என்ற மளும் உள்ளனர். செந்தில்முருகன், பாலசுந்தரி இருவரும் வெளியூரில் வசிக்கின்றனர். பாலச்சந்தர் மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோவில் பணிபுரிகிறார். சுமார் 40 நாட்களுக்கு முன்பு கணவர் அர்ச்சுணன் காலமான நிலையில், ருக்குமணி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த வீட்டருகேயே பாலச்சந்தர் தனது குடும்பத்துடன் வசித்தார்.
சம்பவத்தன்று பாலச்சந்தர் தாய்க்குக்உணவு கொண்டு வந்துள்ளார். வீட்டின் முன்புறக் கதவு மூடியிருந்ததால், கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். நீண்ட நேரமாக தட்டியும் தாய் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது, பின்புற கதவு திறந்து கிடந்ததைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். வீட்டுக்குள் ருக்குமணி தரையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்துபோனார். உடனடியாக அவர் வள்ளியூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ருக்குமணியின் சடலத்தைக் கைப்பற்றித் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ருக்குமணி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 3பவுன் வளையல், கம்மல், மோதிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. மொத்தம் 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ருக்மணி உடலில் காயங்கள் ஏதும் இல்லை . இதனால், அவர் எப்படி இறந்தார்? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். ருக்மணியிடம் நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அவரது வாயையும், மூக்கையும் பொத்தி கொலை செய்து விட்டு, நகைகளை பறித்து சென்றதாக தெரிகிறது. ஆனால் , ருக்குமணி எவ்வளவு பவுன் நகைகள் அணிந்திருந்தார் என்பது குறித்த தகவல் அவரது மகனுக்கு சரியாக தெரியவில்லை. எனினும் , கொள்ளைபோன நகை 10 பவுனுக்கு அதிகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
போலீசார் பக்கத்து வீடுகளிலுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்ததாக கருதப்படும் நேற்று அதிகாலை முதல் காலை 8 மணி வரையிலும் சி.சி.டி.வி. காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது , சேலை உடுத்தியபடி, ஒருவர் ருக்மணி வீட்டின் பின்பக்க காம்பவுண்டு சுவர் அருகே நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நேற்று சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ஒரு திருநங்கை, ஒரு பெண் மற்றும் ஒரு வாலிபர் என 3 பேரை பிடித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தினர்.அதோடு, சிசிடிவி கேமராக்களையும் தீவிரமாக ஆராய்ந்தனர்.
இதற்கிடையே, களக்காடு அருகேயுள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த வீரவேலின் என்பவரின் மகன் விஜய் , ருக்குமணியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதற்காக ,பெண் வேடமிட்டு வீட்டிற்குள் நுழைந்து, ருக்குமணியை கொலை செய்து விட்டு, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி, கைகளில் இருந்த தங்க வளையல்கள், தங்க மோதிரம் மற்றும் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிவிட்டு தப்பியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விஜய் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடன் தொல்லை காரணமாக ருக்குமணியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். திருடப்பட்ட நகைகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
எந்த ஒரு நேரடி சாட்சியமோ, சிறு சாட்சியகளோ இல்லாத நிலையில், சிசிடிவி பதிவில் கிடைத்த துப்பின் அடிப்படையில் இந்த வழக்கை திறமையாகப் புலனாய்வு செய்து, குற்றவாளியைக் கைது செய்த வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் நவீன் மற்றும் வள்ளியூர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் வெகுவாகப் பாராட்டினார்.