குளத்து மண் கடத்தல்: கூடங்குளம் அருகே 100 லாரிகள் சிறைபிடிப்பு!
கூடங்குளத்தில் குளத்து மண்ணை அள்ளி செங்கல்சூளைகளுக்கு விற்பனை செய்த 100 லாரிகள் சிறை பிடிக்கப்பட்டன. குளங்களில் அள்ளப்படும் மண், விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. ஆனால், நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே சங்கனாபுரம், கணபதியாபுரம், ஜெயமாதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குளங்களில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, குளத்து மண்ணை எடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல தனியார் செங்கல் சூளைகளுக்கு கடத்தி செல்லப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள், கடந்த 15 நாட்களாகவே லாரி ஓட்டுநர்களிடம் நேரடியாக எச்சரித்துள்ளனர். எனினும், விதிகளை மீறி தொடர்ந்து லாரிகளில் மண்ணைக் கடத்திச் சென்றதால், நேற்று காலை சங்கனாபுரம் விவசாயிகள் கொதிப்படைந்தனர்.
இதையடுத்து, குளத்து மண்ணைச் செங்கல் சூளைக்குக் கடத்திச் சென்ற லாரிகளை விவசாயிகள் இடைமறித்துச் சிறைபிடித்தனர். சுமார் 100 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது. அதோடு, சங்கனாபுரம் பகுதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தால் லாரிகள் சாலையில் அணிவகுத்து நின்றன. இதனால், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து, ராதாபுரம் தாசில்தார் மாரிச்செல்வம், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் சமரச பேச்சுவார்த்தயில் ஈடுபட்டார். தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, லாரிகளை விவசாயிகள் விடுவித்தனர்.
குளத்து மண் கடத்தலைத் தடுக்க அரசுத் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் .விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.