புகாரே கொடுக்காமல் போலீசார் மீது குற்றம்சாட்டிய பெண்... மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் எஸ்.பி அலுவலகம் விளக்கம்
நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், ஏராளமான பொதுமக்கள் எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனுக்களை அளித்தனர். அப்போது பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி முத்துராமலிங்கபுரம் தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் அளித்த புகார் மனுவில் கூறியதாவது:
என்னுடைய 16 வயது மகன் பாலகுருநாதன் என்பவர் பாளையங்கோட்டை ஜான்ஸ் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறான். எங்கள் ஊரில் வசிக்கும் முத்தையாதேவர் என்பவரின் மகன் அழகுமுத்து (40) மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அழகுமுத்து மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தகாராறில் ஈடுபடுவார். கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி மாலை எனது மகனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். நாங்கள் அன்றைய தினம் இரவு 8 மணியளவில் பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் அளித்ததால், ஆத்திரமடைந்த அழகுமுத்துவும் அவரது நண்பர்களும் மது போதையில் வந்து, கொலை செய்து விடுவோம்' என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அழகுமுத்துவின் மிரட்டல் அதிகாரித்துள்ளது. இதனால், எனது மகனுடனும் உறவினர்களுடனும் பளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் மாறி மாறி அலைக்கழிக்கப்படுகிறோம். எனவே, அழகுமுத்து மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி சிலம்பரசன் இந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிலையிர், மாரியம்மாள் கொடுத்த புகாரின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நெல்லை மாவட்ட எஸ்.பி. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விவரம் கேட்டறிந்தார். பின்னர், நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது,
மாரியம்மாள் என்பவர் சம்பந்தப்பட்ட தாலுகா காவல் நிலையத்தில் இச்சசம்பவம் தொடர்பாக எந்த ஒரு புகார் மனுவும் அளிக்கவில்லை . இவர், அளித்துள்ள மனுவினை ஊரக உட்கோட்ட காவல் அலுவலகம் மூலமாக தாலுகா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு, விசாரணைக்கு அழைத்தும் , ஆஜராகாமால் தவித்துள்ளார். மனுதாரர் விசாரணைக்கு எந்த ஒரு ஒத்துழைப்பும் வழங்னவில்லை. விளக்கமும் அளிக்கவில்லை.
மனு விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில், மனுதாரரின் மனுவிற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தவறான கருத்துக்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வரப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில், பொதுமக்களிடம் புறப்படும் புகார் மனுக்களின் மீது காவல்துறையின் சார்பாக சட்டத்திற்கு உட்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.