உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்... நெல்லை மாநகராட்சியை கேக் வெட்டி கேலி செய்த சமூகஆர்வலர்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று நடந்த செய்திகள் குறித்து பார்க்கலாம்.
கால்வாய் பணிகள் தாமதம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நெல்லையில் கால்வாய் விரிவாக்கம் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் இருந்து பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரை சாலையில் கால்வாய் விரிவாக்க பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் நடந்த போது, பல்வேறு இடங்களில் கழிவுநீர் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள். திடீரென்று இந்த பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படாததால் ஒப்பந்தக்காரர் பணியை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ஓடி விட்டார்
இதனால், கால்வாய் முழுவதும் தற்போது கழிவு நீர் ஓடையாக மாறி வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 25வது நாளாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில், கேக் வெட்டி கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
சாம்பவர்வடகரையில் சண்டையிட்டு கொள்ளும் மாணவர்கள்
சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அங்குள்ள டியூசன் சென்டரில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில் நேற்றும் பஸ் நிலையம் அருகே இருதரப்பு மாணவர்களும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கம்பு, கல் உள்ளிட்டவற்றை கொண்டு ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கினர்.இதில் 5-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக சாம்பவர் வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
குடிபழக்கத்தால் போன உயிர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த அச்சன்புதூர் மணக்காடு தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகன் முகமது ஹனிபா (வயது 38). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். முகமது ஹனிபாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், ஏற்பட்ட குடும்ப தகராறில் அவரது மனைவி குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் முகமது ஹனிபாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டின் கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்து முகமது ஹனிபா குடித்துவிட்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அச்சன்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.