காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை... மது, நெகிழிக்கு தடை
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் காரையாறு பகுதியில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசை மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடன் செய்து வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டு வருகிற 24-ம் தேதி ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. வருகிற 26-ம்தேதி சிங்கம்பட்டி ஜமீன் சாமி தரிசனம் நடைபெறும். சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக பல்வேறு சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, 'பக்தர்கள் வனத்துறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நான்கு மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய தாமிரபரணி ஆறு மற்றும் அது உருவாகும் வனத்தில் இயற்கை சூழலை பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்து பக்தர்கள் செயல்பட வேண்டும். பொதுமக்கள் பொருட்களை எடுத்து செல்ல ஜூலை 22-ஆம் தேதி காலை 6மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் பாபநாசம் சோதனை சாவடியில் இருந்து தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
ஜூலை 19, 20 , 21 தேதிகளில் நாள் முழுவதும் திருக்கோயில் நிர்வாகம் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் காரணத்தினால் பாபநாசம் வன சோதனை சாவடி மூடப்படும். இந்த நாட்களில் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஜூலை 23-ஆம் தேதி முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ளவற்காக கோவிலில் தங்க அனுமதி உண்டு.
பக்தர்கள் அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளில் மட்டுமே திருக்கோவிலுக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படமாட்டாது. பக்தர்கள் பொருட்களை கீழே கொண்டு வருவதற்காக மட்டும் தனியார் வாகனங்களுக்கு ஜூலை 26 -ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 3 மணிவரையிலும் பாபநாசம் கோவில் பார்க்கிங் பகுதியில் பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படும்.
ஜூலை 27 மற்றும் ஜூலை 28-ஆம் தேதிகளில் தூய்மை பணிகள் மற்றும் திருக்கோவில் உழவார பணி காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜூலை 29-ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி திருக்கோவிலுக்கு சென்று வரலாம்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், தடை செய்யப்பட்ட 27 வகையான நெகிழிப் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்ணெண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பக்தர்கள் ஜெனரேட்டர்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மது, குட்கா உள்ளிட்டவற்றை வனப்பகுதிக்குள் கொண்டு செல்லும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. பக்தர்கள் குடில்களில் மட்டுமே தங்க வேண்டும். தனி நபர்களிடம் குடில்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். பொது இடங்களில் அசுத்தம் செய்ய கூடாது,. வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 200 கழிவறைகளை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.