பனைமரம் மரபணு ஆராய்ச்சி ... டாக்டர் பட்டம் பெற போகும் நெல்லை மாணவர்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பனைமரத்தின் மரபணுவை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தாவர மரபணு ஆராய்ச்சி என்பது இயற்கையின் ரகசியங்களை தெரிந்துகொள்வதற்கான திறவுகோள். எதிர்கால சந்ததிக்கு வளமான பூமியை கொடுக்க இந்த ஆராய்ச்சிகள் மிகவும் அவசியம். அதனால்தான் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தாவரங்களை ஆராய்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம். அதன் ஓலையில் கூடை முடையலாம், நாரில் கயிறு திரிக்கலாம், மட்டையில் வேலி போடலாம். அது மட்டுமல்லாமல், கருப்பட்டி, பதநீர், நுங்கு, கிழங்கு என மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களும் உதவும்.

தென் மாவட்ட கிராம பொருளாதாரத்தில் பனை மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட பனை மரத்தின் மரபணு எப்படி இருக்கும் என தெரிந்தால் பனை மரத்தின் பயன்களை இன்னும் பெருக்கிக்கொள்ள முடியும். மேலும் , பனை மரத்தின் வறட்சியை தாங்கும் திறன், நோய் தாக்குதலை சமாளிக்கும் குணங்களை அறிந்து கொண்டால், மற்ற தாவரங்களையும் பாதுகாக்க திட்டங்களை வகுக்க முடியும்.

பனை மரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் முனைவர் பட்ட படிப்பு மாணவர் விஜித், பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் வழிகாட்டுதலின்படி, பனை மரத்தின் மரபணுவை ஆராயும் முயற்சியில் இறங்கினார். இந்த ஆராய்ச்சியில் தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள எஸ்விஏ கல்வி அறக்கட்டளையும் கை கோர்த்தது. சுமார் 4 ஆண்டுகள் செயல்பட்டு பனை மரத்தின் மரபணு பற்றிய முழுமையான தகவல்களை திரட்டியுள்ளனர். இந்த ஆராய்ச்சில வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரத்தில் உள்ள பனைமரம் பின்டெக் நிறுவனமுத் தொழில்நுட்ப உதவி செய்து மாணவரின் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக நின்றது.

ஆராய்ச்சியின் மூலம், பனையில் 230 கோடி காரணிகளை கொண்ட ஒரு பெரிய மரபணுத் தொகுப்பு உள்ளது. அதில் 32 ஆயிரம் புரதங்களை உருவாக்கக்கூடிய மரபணுக்களும் இருக்கிறது. இந்த புரதங்கள்தான் பனை மரம் வளர்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரிய வந்தது. குறிப்பாக பனையில் இருந்து கிடைக்கும் பதநீரில் அதிகமாக குளுக்கோஸ், பர்டொஸ் மற்றும் சுக்ரோஸ் இருப்பதால் இனிப்புடன் உள்ளது என்றும் இனிப்புப் பொருட்களை உருவாக்க பனைமரம் பயன்படுத்தும் நொதிகளின் மரபணுக்களும் கண்டறியப்பட்டுள்ளன .

இந்த மரபணு தகவல்கள் மூலமாக பனை மரத்துக்கு நோய் எப்படி வருகிறது?. நோய் தாக்கினால் அது எப்படி தப்பிக்கிறது என்பது குறித்து கண்டுபிடிக்க முடியும். அது மட்டுமல்ல, நாம் விரும்பி குடிக்கும் பதநீர் ஏன் இனிப்பாக இருக்கிறது, அதுக்கு காரணமான நொதிகள் என்னென்ன உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன. வறண்ட பூமியில கூட பனை மரம் எப்படி நீடித்து வாழ்கிறது. அதற்கு காரணமான நொதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சியின் முழு விவரமும் நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் தலைமையில் அமெரிக்காவில் உள்ள தேசிய உயிர்தொழில்நுட்ப தகவல் மைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் ஆராய்ச்சியாளர்களும், மாணவ மாணவியரும் பனை மரம் பற்றி முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.

More News >>