வீரவநல்லூர் அருகே மாணவர் தற்கொலை: தனியார் பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ரவநல்லூரில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்டதால், நள்ளிரவில் தனியார் பள்ளி வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கரகுமார் என்பவரின் மகன் சபரிகண்ணன் (வயது 15). இவர் வீரவநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7-ஆம் தேதி, ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த சபரிகண்ணன் விஷம் குடித்து விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், நேற்று (ஜூலை 17) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சபரிகண்ணனின் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு, ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ,அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மாணவர் தற்கொலை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. மாணவர் சபரிகண்ணன் படித்த தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனங்கள், வீரவநல்லூர்-வெள்ளாங்குளி செல்லும் பசாலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நள்ளிரவு சுமார் 12 மணியளவில், இந்த வாகனங்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதையடுத்து, அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. தகவல் அறிந்ததும், சேரன்மகாதேவி தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மாணவன் சபரிகண்ணன் தற்கொலை செய்துகொண்டதன் எதிரொலியாக, பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

More News >>