வீரவநல்லூரில் கேட் அருகே விஷம் குடித்து பள்ளிக்கு சென்ற மாணவன்... பிரார்த்தனையின் போது மயங்கி விழுந்த சோகம்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த சங்கரகுமார்(43), விவசாயியான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் சபரிகண்ணன் (15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சபரிகண்ணன் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 4ம் தேதி சரியாக படிக்காததால் ஆசிரியர்கள் மாணவனை கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர், விடுமுறை முடிந்து சபரிகண்ணன் கடந்த ஜூலை 7ல் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளி கேட் அருகே மறைத்து வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டு சபரிகண்ணன் பள்ளிக்குள் சென்றுள்ளார். பள்ளியில் பிரார்த்தனை நடக்கும் போது மயங்கி விழுந்த, அவரை ஆசிரியர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 10 நாட்கள் சிகிச்சையில் இருந்த சபரி கண்ணன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு காலை உயிரிழந்தார். தகவலறிந்த மாணவனின் உறவினர்கள் நெல்லை- அம்பை சாலையில் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் , போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சேரன்மகாதேவி டிஎஸ்பி சத்யராஜ், அம்பை டிஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபரிகண்ணனின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவனின் உறவினர்கள் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியைகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, சபரி கண்ணனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.