காட்டுபன்றி தொல்லைக்கு விடிவே இல்லையா? நெல்லை கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் இன்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் நெல்லை டவுன் நயினார்குளம் விவசாயிகள் சங்க உதவி தலைவர் முருகன் கூறுகையில், நெல்லை கால்வாய் முழுவதுமாக தூர் வாரப்படவில்லை. டவுன் அரசடி தொடங்கி தென்பத்து பிரிவு வரை தூர் வராமல் விடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தடுப்பது சிரமம். எனவே கால்வாயை முழுமையாக தூர்வாரி தர வேண்டும் என்றார்.

பள்ளமடை விவசாயி சேகர் கூறுகையில், பள்ளமடைகுளம் மறுகால் செல்லும் இடத்தில் தடுப்பணை சீரமைக்கப்படாமல் உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் கல்லிடைக்குறிச்சி விவசாயி சொரிமுத்து கூறுகையில், சேரன்மகாதேவி பகுதிக்கான 2 நடுவை எந்திரங்களில் ஒன்று கன்னியாகுமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நமக்கு போதிய நடுவை எந்திரம் இல்லை. எங்கள் பகுதியில் விவசாய நிலங்களில் அடிக்கடி கழிவுநீர் கலக்கிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மானூர் விவசாயி ஆபிரஹாம் கூறுகையில், மானூர் சுற்றுவட்டாரங்களில் பல இடங்களில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கலெக்டர் சுகுமார் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதாக புகார்கள் வந்துள்ளன. ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ பற்றி எரியும்போது நானே அதை நேரில் கண்டு இரு இடங்களில் மின் வயர்களை உயர்த்த உத்தரவிட்டுள்ளேன். இதுவரை மாவட்டத்தில் சுமார் 4 பேர் மின்விபத்துகளில் பலியாகி உள்ளனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் வயர்களை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விவசாய சங்கத்தினை சேர்ந்த உடையார் செய்தியாளர்களிடம் பேசும் போது. காட்டுப்பன்றி விவகாரத்தில் தமிழக அரசு உத்தரவிட்ட பிறகும் வனத்துறை பன்றிகளை சுடுவதற்கு உரிய  நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் சாக்கு போக்கு சொல்லி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்

More News >>