தூத்துக்குடி பனியமாதா கோவில் திருவிழா... பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

தூத்துக்குடி உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருவிழாவுக்காக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உலகப் புகழ் பெற்ற தூய பணிமய மாதா பேராலய 443 வதுஆண்டு  திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள்.

திருவிழாவுக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டார் 

ஜூலை  26  முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வர அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். காவல்துறை சார்பில் போக்குவரத்து ஏற்பாடுகள் , வாகனம் நிறுத்துமிடங்கள் ,சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

சுகாதாரத்துறை சார்பாக திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன், தயார் நிலையில் இருக்க ஏற்பாடு  செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 40 சிறப்பு நகர பேருந்துகள் இயக்குவது மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்வது உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நல்ல முறையில் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. 

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், தூய பனிமய மாதா பேராலய அருட்தந்தை ஸ்டார்வின், விழா கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

More News >>