பழைய 100 ரூபாய் நோட்டு செல்லுமா? செல்லாதா? பாளையங்கோட்டையில் வெடித்த சர்ச்சை
பாளையங்கோட்டையில் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், புழக்கத்திலுள்ள 100 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரத்தினகுமார். இவர் தனது மனைவியுடன் நேற்று அதே பகுதியிலுள்ள கூட்டுறவு அங்காடிக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். வாங்கிய பொருட்களுக்காக 100 ரூபாய் பழைய நோட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். பணத்தைப் வாங்கிய கடை விற்பனையாளர் , "இந்த பணம் செல்லாது, வேறு பணம் கொடுங்கள்" என்று கேட்டுள்ளார். உடனே, ரத்தினகுமார், "புழக்கத்தில் உள்ள பணம் இது. அரசு இதுவரை இந்த பணத்தை செல்லாது என அறிவிக்காத நிலையில், ஏன் வாங்க மறுக்கிறீர்கள்?" என்று பதிலுக்கு கோபமாக கேட்டுள்ளார். இதற்கு கடை விற்பனையாளர், ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளாலும் பேசியதோடு, 100 ரூபாய் நோட்டை ரத்தினகுமாரின் முகத்தில் தூக்கி எறிந்து, 'கிழித்துப் போடு 'என்று கூறியுள்ளார். இதனால் , மனவேதனையடைந்த ரத்தினகுமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு அளித்தார்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.