பயணிகளை பேருந்தில் ஏற்றி விட்டு டெப்போவுக்கு பெட்ரோல் நிரப்ப போறீங்களா? டிரைவர்களுக்கு செக்

நெல்லை பாளையங்கோட்டை, வ.உ.சி நகர், டி காலனியில் வசித்து வரும் வழக்கறிஞர் பிரம்மநாயகம், மதுரை சென்று விட்டு, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தில் கடந்த ஆண்டு ஜூன் 6ம் தேதி பயணம் செய்தார். பயணக் கட்டணமாக ரூ.153 செலுத்தி டிக்கெட் பெற்றார். பயணத்தின்போது, பேருந்து கோவில்பட்டி அரசுப் பணிமனையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பேருந்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே, டீசல் நிரப்பும் பணி சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இதனால், திருநெல்வேலியை வந்தடைவதற்கு 40 நிமிடங்கள் காலதாமதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்குள்ளான வழக்கறிஞர் பிரம்மநாயகம், திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் உடனடியாக வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத் தலைவர் கிளடஸ் டோன் பிளசட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், பயணிகளை பேருந்தில் ஏற்றி விட்டு கொண்டு டீசல் நிரப்பியது சேவை குறைபாடு என்று தீர்ப்பளித்தனர். பிரம்மநாயகத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.20,000 வழக்குச் செலவாக ரூ.10,000 சேர்த்து மொத்தம் ரூ.30,000 வழங்க அரசுப் போக்குவரத்துக் கழக நாகர்கோவில் கிளை மேலாளர், பொது மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனல். இந்த பணத்தை தங்களது சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும், ஒரு மாத காலத்திற்குள் இந்த தொகையை கொடுக்கத் தவறினால், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் காட்டும் அக்கறையை காட்டுகிறது

More News >>