அண்ணாமலையுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்!

திருநெல்வேலி: மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசியத் தலைவர் எச். ராஜா, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாஜக மேலிட மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பாஜக சார்பில் பங்கேற்றனர்.

இவர்களுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

​இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் மோடியை தூத்துக்குடியில் வரவேற்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து முக்கிய தலைவர்களும் ஒருங்கிணைந்து திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

​முன்னதாக செய்தியாளர்கள், அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் (ஆகஸ்ட் 2025) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேட்டனர்.

இதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன்,

"தென் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வரும்போது அவருடைய கூட்டத்திற்கு நாங்கள் கலந்து கொள்வோம். எடப்பாடி பழனிசாமியின் தமிழக சுற்றுலா ஆரம்பித்தபோது நாங்கள் பாஜக சார்பில் அவருடன் கலந்து கொண்டோம். தற்போது தென் மாவட்டங்களுக்கு வரும்போதும் அவருடைய கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம்" என்று தெரிவித்தார்.

​மேலும், வரும் ஆகஸ்ட் 17 அன்று திருநெல்வேலியில் நடைபெறவுள்ள பாஜக முதல் மாநில மாநாட்டிற்கு யார் யார் வருகிறார்கள் என்று கேட்டபோது,

நயினார் நாகேந்திரன் அது குறித்து விரைவில் தகவல் அளிப்பதாகத் தெரிவித்து, அண்ணாமலையுடன் புறப்பட்டுச் சென்றார்.

More News >>