மானூர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு ஒரு மணிநேரத்தில் கைவரிசை!
நெல்லை, ஜூலை 27: மானூர் அருகே பெண் ஒருவர் மாடு மேய்க்க சென்றுவிட்டு வீடு திரும்பிய ஒரு மணிநேரத்தில் பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மானூர் அருகே நாஞ்சான்குளம், புத்துக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் மூகாம்பிகை (39). தனியார் கம்பேனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது வீட்டு பீரோவை பூட்டிவிட்டு சாவி தன்னுடன் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அவரது தந்தை ஜெயபாலும் நேற்று காலையில் 100 நாள் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரது தாயார் வழக்கம் போல் வீட்டு கதவை பூட்டு போட்டு பூட்டாமல் தாழிட்டு மாடு மேய்ச்சலுக்காக சென்றார்.
பின்னர் ஒரு மணிநேரம் கழித்து மூகாம்பிகையின் தயார் வீடு திரும்பினார். அப்போது பீரோ பூட்டாமல் கிடந்துள்ளது. ஆனாலும் மூகாம்பிகையின் தயார் மகள் பூட்டாமல் சென்றிருப்பார் என நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் நேற்று இரவு வேலை முடிந்து மூகாம்பிகை வீட்டிற்கு வந்து பீரோவை பூட்டாமல் கிடப்பதை பார்த்தார். மேலும், பீரோவில் இருந்த நகை பெட்டிகளும், அதில் இருந்த சுமார் 10 பவுன் நகைகள் திருடு கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக மானூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற மானூர் இன்ஸ்பேக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார். அப்போது மூகாம்பிகை போலீசாரிடம் தங்க நெக்லஸ் உள்ளிட்ட நகைகள் வைத்திருந்த பெட்டிகள் திருடு போனதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை போலீசார் சேகரித்தனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூகாம்பிகையின் தாயார் ஒரு மணிநேரம் வெளியே சென்று வீடு திரும்புவதற்குள் நகைகள் திருடு போன சம்பவம் மானூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.