திருநெல்வேலி ஊடகவியலாளர்களுக்கு ஸ்ரீ சக்தி மருத்துவமனை சார்பில் முதலுதவி பயிற்சி!
திருநெல்வேலி, ஜூலை 28: திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றம் மற்றும் நெல்லை ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து ஊடகவியலாளர்களுக்கான சிறப்பான முதலுதவி பயிற்சி வகுப்பை ஸ்ரீ சக்தி மருத்துவமனையில் நடத்தியது. விபத்துகள் மற்றும் அவசர காலங்களில் உயிர்களைக் காப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சிகள் இதில் வழங்கப்பட்டன.
இந்த "Golden Hour First Aid & Life Saving Training" நிகழ்ச்சியில், எலும்பியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் பாபு மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் சுமதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் அவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
குறிப்பாக, மாரடைப்பு போன்ற இருதய பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிபிஆர் (CPR) எனப்படும் மாரடைப்பு முதலுதவி சிகிச்சை குறித்து பங்கேற்பாளர்களுக்கு செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
ஒரு டம்மியைப் பயன்படுத்தி சிபிஆர் எப்படி செய்வது என்று தெளிவாக விளக்கப்பட்டது. பவர் பாயிண்ட் விளக்கக்காட்சிகள் மூலமாகவும் தகவல்கள் பகிரப்பட்டன.
ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, இந்த உயிர்காக்கும் நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர். பயிற்சி நிறைவில், பங்கேற்ற அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் முதலுதவி கிட் வழங்கப்பட்டன.
இந்த பயிற்சி, அவசர காலங்களில் விரைந்து செயல்பட்டு உயிர்களைக் காப்பாற்ற ஊடகவியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.