நெல்லை பாப்பாகுடி : உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்கிய 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு... பின்னணி என்ன?

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி பகுதியில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, விசாரணைக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயன்ற 17 வயது சிறுவன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து காயமடைந்த சிறுவன், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்தச் சம்பவத்தில் உதவி ஆய்வாளருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே நேற்று (ஜூலை 28)மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து தகவல் அறிந்த பாப்பாகுடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்.

அப்போது, ஆத்திரத்தில் இருந்த சிறுவன், காவல் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயன்றுள்ளான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் முருகன், அருகில் இருந்த வீட்டின் கழிவறைக்குள் சென்று மறைந்ததாக தெரிகிறது

ஆனாலும், சிறுவன் ஆத்திரத்துடன் விடாமல் கழிவறையின் கதவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான். இந்த தாக்குதலால் உள்ளே இருந்த உதவி ஆய்வாளர் முருகனுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் முருகன், தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சிறுவனின் வயிற்றுப் பகுதியை நோக்கிச் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் குண்டு பாய்ந்து கீழே விழுந்த சிறுவன் உடனடியாகக் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாப்பாகுடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோதலின் பின்னணி, சிறுவனின் செயல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான முழுமையான சூழ்நிலைகள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பாகுடி பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு, கூடுதல் காவல் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

More News >>