என்ஜினீயர் கவின் கொலைவழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் நீடிக்கும் விசாரணை!

நெல்லை: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் அரசு பள்ளி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கவின் செல்வகணேஷ்(வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

கவின் தூத்துக்குடி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பாளை கே.டி.சி. நகரை சேர்ந்த சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதியரின் மகளுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

ஆனால் அவர் பழகுவது அந்த பெண்ணின் சகோதரரான பட்டதாரி வாலிபர் சுர்ஜித்(24) என்பவருக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் பலமுறை கவின் செல்வகணேசிடம் எச்சரித்த நிலையில் அவர் கேட்கவில்லை என்பதால் நேற்று முன்தினம் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து சுர்ஜித் வெட்டிக்கொலை செய்தார்.

இதுதொடர்பாக பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தார். இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் அவரது தாய்-தந்தையரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களை வழக்கில் சேர்த்து நடவடிக்கை எடுக்கவும் சுர்ஜித் உறவினர்கள் கோரிக்கை விடுத்து அவரது உடலை வாங்க மறுத்து முக்காணி ரவுண்டானாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சப்-இன்ஸ்பெக்டர்களான சுர்ஜித்தின் தாய்-தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக சுர்ஜித்தின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே குற்றம் சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகிய 2 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மதியத்தில் இருந்து சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையின் முடிவில் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இருப்பது நிரூபணம் ஆகும் பட்சத்தில் மட்டும் அவர்களை கைது செய்ய முடிவு செய்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

More News >>