புளியரை அருகே மீன் குளம் குத்தகை எடுத்த முனவிரோதத்தில் கொலை இருவருக்கு இரட்டை ஆயுள்
புளியரை அருகே மீன் குத்தகை எடுப்பதில் ஏற்பட்ட முன்பகை காரணமாக, ஒருவரை வெட்டி கொலை செய்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை அருகேயுள்ள கற்குடி இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் ( வயது 28 ) என்பவர் அந்த பகுதியிலுள்ள அனந்தகுளத்தில் மீன் குத்தகை ஏலம் எடுத்துள்ளார். ஹரிஹரனுக்கு முன்னதாக , இந்த குளத்தை ஏலம் எடுத்து நடத்திக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த காளி, உதயகுமார், மாரித்துரை ஆகியோர் ஹரிஹரன் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் , இரு தரப்புக்கும் இடையில் பகை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹரிஹரன் ஏலம் எடுத்துள்ள அனந்தகுளத்தில் மேற்படி நபர்கள் தண்ணீரில் விஷத்தை கலந்து மீன்களை கொன்றுள்ளனர்.
இது பற்றி ஹரிஹரன் புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி அன்று இரவு 11.30 மணிக்கு ஹரிஹரன் வீட்டுக்குள்உதயகுமார், மகேஷ், நவாஸ்கான், சங்கிலி,அவரது மகன் பாலகிருஷ்ணன் மற்றும் காசி ஆகிய 6 பேரும் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதனால், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.மனோஜ்குமார் விசாரித்தார். விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஹரிஹரனை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து சங்கிலி (வயது 55) நவாஸ்கான் (வயது 30) ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். காசி மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் குற்றவாளிகளான உதயகுமார், மகேஷ், ஆகியோர் இறந்துவிட்டனர். வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.