அரிவாளுடன் இன்ஸ்டாவில் பல போஸ்ட்... நெல்லை காவல்துறை மிஸ் செய்தது எப்படி?
நெல்லையில் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுர்ஜித்தை இன்று காலை திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க தீவிர திட்டமிட்டுள்ளனர். இந்த பரபரப்பான கொலை வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே, சுர்ஜித்தின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர்சட்டம் பாய்ந்தது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி பரிந்துரையின் பேரில் சுர்ஜித் மீது குண்டர்சட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நெல்லை வாட்சப் குழுக்களில் சுர்ஜித் அரிவாள்களுடன் பல்வேறு போஸ்ட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன. அவற்றில், கையில் அரிவாளுடன் சுர்ஜித் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். திருநெல்வேலி மாநகரிலும் மாவட்டத்திலும் அரிவாளை காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறை சுர்ஜித்தை மட்டும் எப்படி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் ? என்றும் பெற்றோர் போலீசில் பணி புரிபவர்கள் என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டார்களா? என்றும் கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.