நெல்லை கவின் படுகொலை - கொலையாளி சுர்ஜித்தின் தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் சிறையிலடைப்பு!

நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியாக காவல் உதவி ஆய்வாளர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் கடந்த 27.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது 27) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொலை செய்த குற்றத்திற்காக அதே பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 23) என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரான சுர்ஜித்தின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், இன்று (30.07.2025) கைது செய்யப்பட்டுள்ளார். சரவணன், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ஆவார்.

கொலையான கவினின் பெற்றோர் அளித்த புகாரின்படி, சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரியின் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் உதவி ஆய்வாளர் சரவணன் மீது கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யும் வறை உடலை வாங்க மாட்டோம் என்று கவின் உறவினர்கள் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் துறை அலுவலகத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் தென் மண்டல ஐஜி பிரேமானந்த சின்ஹா நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் அதிமணிநெல்லை மாநகர துணை ஆணையர்கள் பிரசன்னா, மற்றும் விஜயகுமார் உட்பட காவல்துறை அதிகாரிகள்  தீவிர ஆலோசனை மேற்கொண்ட நிலையில் உதவி ஆய்வாளர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றவாளியான உதவி காவல் ஆய்வாளர் சரவணன் நெல்லை மாவட்ட நீதித்துறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் தற்போது அவரை வரும் ஆகஸ்ட் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

More News >>