நெல்லை கவின் படுகொலை: வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைப்பு!

நெல்லையில் மென்பொருள் பொறியாளர்  கொலை வழக்கு, சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டதைத்தொடர்ந்து , சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். பாளையங்கோட்டை போலீசார் இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் மென்பொருள் பொறியாளரான இவர் சென்னையில் ஐ.டி ஊழியராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில்  இவர் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை  கே.டி.சி நகர் பகுதியில் வைத்து அதே பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் தம்பதிகளான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் (24) என்ற இளைஞரால்  வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித்தை கைது செய்தனர். இந்நிலையில் அவரது பெற்றோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாகவும் அவர்களை கைது செய்யும் வரை உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் எனவும் கவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களாக சுர்ஜித்தின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு அவரது தந்தையான சரவணனை கைது செய்தனர்.

தொடர்ந்து இரவோடு இரவாக நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் அவரை வருகிற 8-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல்துறை உதவி ஆய்வாளர்களாக இருப்பதால் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தரத்திலான அதிகாரிகள் தான் இதன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படும் நிலை இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல்  துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவரோஜிடம் பாளையங்கோட்டை போலீசார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள், மேலும் கவின் பயன்படுத்திய செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் ஒப்படைத்தனர். இதனை அடுத்து சிபிசிஐடி போலீசார்  முதற்கட்ட விசாரணையை தொடங்குகினர்.

More News >>