குமரி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்படும் கல் மண்டபங்கள் - சமூக பொதுநல இயக்கம் புகார்
குமரி மாவட்டம் அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த காலகட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பாதசாரிகளுக்கு தங்கி இளைப்பாறி செல்லும் வகையில் வழியோர விடுதிகளாய் கட்டப்பட்டது கல்மடங்கள் எனப்படும் கல்மண்டபங்கள். மாவட்டம் முழுதும் பல நூறு கல்மடங்கள் இருந்த நிலையில் சாலை விரிவாக்கம், தனிநபர்களால் அழிப்பு, பேரிடர் பாதிப்பு உள்ளிட்டவற்றால் தொலைந்தது போக தற்போது சில கல்மடங்களே வரலாற்று சாட்சிகளாய் மிஞ்சி நிற்கின்றன.
அதுவும் பல்வேறு மண்டபங்கள் பராமரிப்பு எதுவும் செய்யப்படாமல் பாழடைந்து, புதர்செடிகள், மரங்கள் வளர்ந்து தனது அந்திம காலத்தினை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. பல மடங்கள் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள், மத அமைப்புகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி அவை இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டு அவர்களது பயன்பாட்டில் உள்ளன. இவை பல நூற்றாண்டுகளாக இயற்கையின் சீற்றங்களை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டதால் இன்று வரையில் அவை ஜீவித்து நிற்கின்றன.
நமது முன்னோர்களின் கட்டிட மற்றும் சிற்பக்கலைகளுக்கு இவை சான்றாக திகழ்வதோடு இவற்றில் காணப்படும் வரலாற்று, இதிகாச சிற்பங்கள், வட்டெழுத்துக்கள், விலங்குகளின் உருவங்கள், கல்வெட்டுக்கள் மூலம் இத்தகைய மடங்கள் வரலாற்றின் எச்சமாகவே திகழ்கிறது. இருந்தும் இதனை பராமரிக்கவோ, பாதுகாக்கவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இவை அழிவின் விளிம்பில் உள்ளன. சில கல்மடங்களின் பெயரில் அநேக சொத்துக்களும் உள்ளதாக தெரிகிறது.
இத்தகைய கல் மண்டபங்கள் நமது பண்டைய பண்பாட்டின் கூறுகள். நமது கலாசாரத்தின் கண்ணாடிகள். இதனை அழிப்பது, அழிய செய்வது நமது வரலாற்றை, பண்பாட்டை, கலாசாரத்தை அழிப்பதற்கு சமம். இவற்றை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு பழமைமாறாமல் புதுப்பித்து பாதுகாத்திட வேண்டும். இம்மடங்கள் குறித்து எவ்வித ஆவணங்களும் எத்துறையிலும் இல்லாத சூழலில் இதனை கணக்கெடுத்து இவற்றின் வரலாற்று தொன்மங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை தொல்லியல்துறை கையகபடுத்தி தொடர்ந்து கண்காணித்து அழிக்கபடாமல், ஆக்கிரமிக்கப்படாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் தலைமையில் துணை பொது செயலாளர் M.அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரிகோட்ட செயலாளர் M.அலெக்ஸ் மோசஸ், குமரி மாவட்ட தலைவர் T. குழந்தைசாமி, துணை தலைவர் S.ஜேசுராஜ்,செயலாளர் P.சந்திரா, துணை செயலாளர் பேரா. C. மோகன், அமைப்பு செயலாளர். புதுக்கடை பாண்டியன், நிர்வாகி தக்கலை.கென்னடி, அணி செயலாளர்கள் S. அருள்ராஜ், L.ஜார்ஜ், R.சாராபாய் மற்றும் நிர்வாகிகள் குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.