ஆணவகொலை மனித சமுதாயத்துக்கு எதிரானது - ஆதி திராவிட ஆணைய தலைவர் வேதனை
ஐடி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் இன்று நெல்லையில் விசாரணை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கே டி சி நகரில் கடந்த 27ம் தேதி ஐ.டி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார் . இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை தமிழ்நாடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் தலைவர் தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் விசாரணை மேற்கொண்டனர்.இக்குழுவில் துணைத் தலைவர் இமயம் ,உறுப்பினர்கள் ஆனந்தராஜ் , இளஞ்செழியன் செல்வகுமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்
அப்போது இந்த வழக்கு தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்பட வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் நெல்லை மாநகர காவல் துறை ஆணையாளர்கள் விஜயகுமார், வினோத் சாந்தராம் , உதவி கமிஷனர் சுரேஷ்குமார் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் காசி பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய தகவல்களை அளித்தனர்.
பின்னர், தமிழ்நாடு ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நல ஆணைய தலைவர் நீதிபதி தமிழ்வாணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது ஒரு துயரமான சம்பவமாகும். தமிழகத்தில் ஆணவ படுகொலை நடப்பது வேதனை அளிப்பதாகவுள்ளது. இந்த கொலை வழக்கை சாதிய பிரச்சினையாக கருதாமல் சமூகப் பிரச்சினையாக பார்க்க வேண்டும். வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் எவ்வித பிரச்சனையும் இல்லை. அவர்கள் மைனராக இருந்தால் மட்டுமே பிரச்சனை உருவாகும். இப்போது , நடந்திருக்கும் ஆணவ கொலை மனித சமூகத்திற்கு எதிரானது. எல்லோரது மத்தியிலும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காவல்துறை அதிகாரிகளை சந்தித்து இது குறித்து நாங்கள் பேசியபோது முறைப்படி அவர்கள் அனைத்தையும் செய்திருப்பதாக தெரிகிறது. இது போன்ற கொலை வழக்குகளில் ஜாதி உள்ளே வரக்கூடாது. மனிதமே முக்கியம். மக்கள் மத்தியில் இத்தகைய கொலை வழக்குகள் தொடர்பான விழிப்புணர்வை அனைவருமே ஏற்படுத்த வேண்டும்.
இந்த சம்பவத்தால் இரு குடும்பத்தினருமே பாதிக்கப்பட்டு நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் அவசியமாகும். இதற்காக ஆணையம் அரசுக்கு அறிவுறுத்தி வருகிறது. இப்போது நடந்துள்ள கொலையில் எஸ்சி எஸ்டி சட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற ஜாதியினருக்கு இப்பிரச்சனை வரும்போது தனி சட்டம் தேவையாக உள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கும் இதனை வலியுறுத்துகிறோம்.
இது போன்ற வழக்குகளில் ஆணையத்தால் யாரையும் கண்டிக்க முடியாது. நாங்கள் அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே முடியும் .அறிக்கையில் சில பரிந்துரைகளை அரசுக்கு முன் வைப்போம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடுகள் மற்றும் நிவாரணம் மட்டுமே தீர்வாகாது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க வேண்டியது முக்கியம்.
மேலும் அந்த குடும்பத்திற்கு வழங்க வேண்டிய தீர்வு ,நிதி ,வீட்டுமனை பட்டா விவசாயத்திற்கு வழங்கக்கூடிய 2 ஏக்கர் நிலம் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பதையும் இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது. இவை அனைத்தும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலே வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.