பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சென்னை அப்பலோவில் இலவச சிகிச்சை- நெல்லை ராயல் மருத்துவமனை ஏற்பாடு
பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கு இலவச இதய சிகிச்சை, குறிப்பாக அறுவை சிகிச்சை சேவைகளை வழங்க, சென்னை அப்பல்லோ மருத்துவமனை திருநெல்வேலியில் உள்ள ராயல் மருத்துவமனையுடன் கைகோர்த்துள்ளது.
திருநெல்வேலியில் சென்னை அப்பல்லோ மருத்துவர்கள் குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது,
இந்தக் கூட்டு முயற்சியின் கீழ், அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் திருநெல்வேலி பெருமாள்புரத்திலுள்ள ராயல் மருத்துவமனையில் சிகிச்சையளிப்பார்கள்.
இதன் மூலம் பிறவி இதய நோய்களுக்கான ஆரம்ப கட்ட பரிசோதனை முதல் சிக்கலான அறுவை சிகிச்சைகள் வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து இந்தச் சேவையை வழங்கி வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் குழந்தைகள் பிறவி இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். கருவில் இருக்கும்போதே அல்லது குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் இதய பாதிப்புகளைக் கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, "நீல நிற குழந்தைகள்", பால் அருந்துவதில் சிரமம், அதிக வியர்வை போன்றவை இதய நோயின் முக்கிய அறிகுறிகள். ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் இதய நோய்களுக்குக் காரணமாக அமையலாம் .சில குழந்தைகளுக்கு இந்த நோய் பரம்பரையாகவும் தாக்கலாம்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் குழந்தைகள் மற்றும் அவர்களுடன் வரும் பெற்றோர்களுக்கு தங்குமிடம், உணவு வசதி அனைத்தும் அப்பல்லோ நிர்வாகத்தால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளின் இரதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்தச் சந்திப்பில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு நிபுணர் டாக்டர் ராகுல் யாதவ், சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கான இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் நெவில் சாலமன், டாக்டர் சி.எஸ். முத்துக்குமரன், டாக்டர் சரண்யா மற்றும் ராயல் மருத்துவமனை டாக்டர். ராம் கிஷோர் உடனிருந்தனர். மேலும் தகவல்களுக்கு, டி. ராஜ்குமார், சீனியர் மேலாளர் (9840844392 / 7401680253) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.