நெல்லை வியாபாரிகள் சங்கம் சார்பில் எடப்பாடி பழனிசாமியிடம் பல்வேறு கோரிக்கைகள்
நெல்லை மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்திற்காக வந்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தங்கி இருக்கும் தனியார் ஹோட்டலில் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கட்டிடத் தொழிலாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
கூட்டத்தில் விவசாயிகள் கட்டிட தொழிலாளர்கள் வியாபாரிகள் அனைவரும் தற்போதைய ஆட்சியில் சந்திக்கும் பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்தும், தீர்வு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. அதேபோல் விவசாயிகள், வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள் தங்கள் தரப்பு பிரச்சினைகளை எடப்பாடி பழனிசாமியிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர். நெல்லை வியாபாரிகள் சங்கம் அளித்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது,
வியாபாரிகள் வணிகர்களுக்கான கணக்கு வைக்கும் முறையை எளிதாக்க வேண்டும் என்றும், தற்போதைய கணக்கு முறை மிகவும் சிக்கலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதால், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர்ல. மத்திய மற்றும் மாநில அரசுகள் வரியை செலுத்த தவறியதற்கான வட்டி மற்றும் அபராதங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் .வியாபாரிகளின் நலன் கருதி, சங்க விதிகளின்படி ஜி.எஸ்.டி தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன் எங்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் . அபராதம் விதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு நுகர்வோர் பொருட்கள் விநியோக கூட்டமைப்பு சார்பில் கொடுத்துள்ள மனுவிர் தெரிவித்துள்ளதாவது, பாரம்பரிய வணிகத்தை கபளீகரம் செய்து சில்லறை வணிகத்தை முற்றிலும் அழிக்கும் நோக்கம் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களால் வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலையில் உள்ளனர். வேலைஇல்லா திண்டாட்டம் உருவாகும் சூழல் உள்ளது. இவர்களுக்கு அரசாங்கமும் துணையாக உள்ளது. ஒரு பொருளுக்கு பலவிதமான விலைகளை வைத்து அரசுக்கும் இந்த நிறுவனங்கள் வரி இழப்பு ஏற்படுத்தி வருகின்றன .
தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பொருள்களை வாங்கி சில்லறை வணிகர்கள் மூலம் மக்களை சென்றடையும் பணியை செய்து வரும் எங்களுக்கு எந்தவிதமான சட்ட பாதுகாப்பும் இல்லை. நாங்கள் நம்பி இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் எங்கள் விநியோக உரிமையை பறித்து விடுகின்றனர். இதனால் திடீரென வணிகம் இழந்து தவிக்கும் சூழல் உருவாகிறது. எனவே எங்களது வணிகத்தை காக்க சட்ட பாதுகாப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.