நெல்லை அருகே முன்விரோதத்தால் வெறிச்செயல் : 300 வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைப்பு
நெல்லை அருகே முன்விரோதத்தால் மாட்டுக்கு வைத்திருந்த 300 வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடை, தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமார் (43). அதே பகுதியைச் சேர்ந்த சுடலை முத்து (30), பரமசிவம் ஆகியோர் பாலாமடையில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முத்துவும், பரமசிவமும் வெளியூர் சென்று விட்டு பட்டறைக்கு திரும்பியபோது, அங்கிருந்த 50 கிலோ இரும்பு பொருட்கள் காணமல் போய்விட்டதாகக்கூறி திருடியவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற குமார், பொருட்களை காணவில்லை என்றால் போலீசில் புகார் அளியுங்கள் என கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதன் காராணமாக சுடலைமுத்துவும், பரமசிவமும் நேற்று முன்தினம் அதிகாலையில் குமாரின் வீட்டிற்கு அருகே மாடுகளுக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 300 வைக்கோல் கட்டுகள் மீது தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தீ மளமளவென பிடித்து எரிந்தது. இதையறிந்த ஊர் மக்கள் எழுந்து அலறினர். உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கங்கைகொண்டான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். இதில் 300 வைக்கோல் கட்டுகள் தீயில் எரிந்து சாம்பலாகின.இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வேல்கனி இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நேற்று சுடலைமுத்துவை கைது செய்தார். தலைமறைவாக உள்ள பரமசிவத்தை தேடி வருகின்றனர்.