ரஜினிக்கு சூப்பர்ஸ்டார், கமலுக்கு உலகநாயகன்... நடிகர் ஹெச். ராஜாவுக்கு கோலிவுட் செல்லப் பெயர் தெரியுமா?
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதான வேடத்தில் நடிக்கும் கந்தன்மலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக முன்னாள் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர், தற்போது அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். பல ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து வரும் ஹெச்.ராஜா தற்போது திரைப்பட நடிகராக களம் இறங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஹெச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு கந்தன்மலை என்று பெயரிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் பின்னணியில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்ஹாவுக்கு ஆடு கோழி கொண்டு செல்லக் கூடாது, என்று காவல்துறை போட்ட உத்தரவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகளும் அதை எதிர்த்து இந்து இயக்கங்களும் மாறி மாறி குற்றம் சாட்டி போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதை, மையமாக வைத்து கந்தன்மலை கதைகளம் பின்னப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சினிமாவில் அறிமுகமாகும் பலருக்கும் நிக் நேம்கள் உண்டு. ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார், கமலுக்கு உலக நாயகன், விஜயகாந்துக்கு கேப்டன், விஜய்க்கு தளபதி, அஜித்துக்கு தல என செல்லப் பெயர்கள் உண்டு. சரத்குமாருக்கு சுப்ரீம்ஸ்டார், கார்த்திக்குக்கு நவரசநாயகன் இப்படி நிக்நேம்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், ஹெச். ராஜாவுக்கு சினிமாவில் தர்மபோராளி என்ற செல்லப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தர்மபோராளி ஜெயிப்பரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதற்கிடையே, நேற்று நெல்லையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நயினார் நாகேந்திரன் அளித்த விருந்தில் பங்கேற்ற நடிகர் ஹெச். ராஜாவுக்கு நீங்க பெரிய நடிகராக வர வேண்டுமென சக பாஜக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.