ஜாதி என்கிற வார்த்தை பிடிக்கவில்லையா? கலைஞர் பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுங்கள்- நெல்லையில் அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் திமுக அரசு சமூக நீதி குறித்து பேசுவதற்கு தகுதியற்றது என நெல்லையில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார் . பயணத்தின் ஒரு பகுதியாக நெல்லைக்கு வருகை தந்த அவர் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். பின்னர், தாமிரபரணி நதியை பாதுகாக்க தவறியதாக கூறி, தமிழக அரசு மற்றும் நெல்லை மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, " தாமிரபரணி நதியில் குளித்தால் பல்வேறு மோசமான நோய் வரும் அபாயம் உள்ளது. அனைத்து விதமான திட, மற்றும் திரவ கழிவுகளும் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பல்வேறு முயற்சிகளை பாமக சார்பில் மேற்கொண்டு வருகிறோம். நதியை காக்க தகுதியற்றவர்கள் ஆட்சியில் இருக்காதீர்கள். நீதிபதிகள் ஆய்வு செய்தபின்னரும் தாமிரபரணி அப்படியேதான் உள்ளது. கூவத்தை தாமிரபரணியாக மாற்ற கேட்கவில்லை. தாமிரபரணி நதியை கூவமாக மாற்ற வேண்டாம் என்று தான் கேட்கிறோம். தாமிரபரணி காக்கபடாதது வெட்ககேடு அவமானம்..மத்திய அரசு தாமிரபரணி நதியை பாதுகாக்க நிதி ஒதுக்கவேண்டும். முதலமைச்சர்,பொறுப்பு அமைச்சர் சபாநாயகர் ஆகியோர் நதியை பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கூவம் ஆறு சாக்கடையாக மாறியது.தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும். 69% இட ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம் . அது ரத்தானால் அதற்கு முதல்வர் தான் பொறுப்பு. மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாதி என்ற பெயர் பிடிக்கவில்லை என்றால் கலைஞர் பெயரிலாவது கணக்கெடுப்பை நடத்துங்கள் . சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக அரசுக்கு சமூக நீதி பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை.இருமல் மருந்து விவகாரத்தில் மருத்துவர் ஒருவரை மட்டும் கைது செய்து என்ன பயன்? மருந்து கட்டுபாட்டு அதிகாரி, மருந்து உற்பத்தி நிறுவனம அரிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். கூட்டணி குறித்து விரைவில் நானே அறிவிப்பேன். வதந்திகள் யாரும் நம்ப வேண்டாம் .மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார்.அவரை நான் பார்க்காததை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதுபோன்று பேசி கொச்சைபடுத்த வேண்டாம். இன்று மாலை ராமதாஸ் டிஸ்சார்ஜ் ஆகிறார்.
கரூர் விவகாரத்திற்கு பின்னர் பல கட்டுபாடுகள் நீதிமன்றம் விதித்துள்ளது. தனியார் இடத்தில் கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அது போன்று நடத்த எங்களிடம் பொருளாதர வசதி கிடையாது.மக்களை சந்தித்து தான் போராட்டம் நடத்தமுடியும். இந்தியாவில் எங்கும் இல்லாத நிபந்தனைகள் தமிழகத்தில் மட்டும் விதிக்கப்படுகிறது. விஜயுடன் பாமக கூட்டணி சேருமா என்பது போகபோக தெரியும்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.